கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி


கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி
x

ஹாசன் அருகே காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காண்டிராக்டர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா ஈஸ்வரஹள்ளி கிராமம் அருகே பெங்களூரு-மங்களூரு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் நேற்று மாலையில் ஒரு காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் காரில் வந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலமிட்டனர். இந்த விபத்தைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் விரைந்து வந்து காரில் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். மேலும் இதுபற்றி ஆலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டனர்.

அப்போது அவர்கள் 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது ஹாசன் தாலுகா குப்பலி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன், குட்டேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அசோக், தட்டேகேரே கிராமத்தைச் சேர்ந்த புருசோத்தம், ஆலூர் தாலுகா சிகலூரு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பதும், 4 பேரும் காண்டிராக்டர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் வேலை விஷயமாக காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், இதுவரை 100-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story