ஹர்ஷாவின் சகோதரி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


ஹர்ஷாவின் சகோதரி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

சிவமொக்காவில் சாவர்க்கர் ஊர்வலத்தின் போது வாகனங்களை சேதப்படுத்தியதாக ஹர்ஷாவின் சகோதரி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவமொக்கா:

சிவமொக்காவில் சாவர்க்கர் ஊர்வலத்தின் போது வாகனங்களை சேதப்படுத்தியதாக ஹர்ஷாவின் சகோதரி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாவர்க்கர் ஊர்வலம்

சிவமொக்கா மாவட்டம் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் பஜ்ரங்தள பிரமுகர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அங்கு பதற்றம் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் ஒரு பதற்றமான சம்பவம் நடந்திருப்பது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சனிக்கிழமை மாலை சாவர்க்கர் சாம்ராஜ்யம் என்ற பெயரில் ஒரு ஊர்வலம் நடந்தது. இதில் பஜ்ரங்தள பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் கொலையான ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினியும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஊர்வலம் சீகேஹட்டியில் இருந்து கல்லப்பனகேரி தெரு வழியாக ஆசாத் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

15 பேர் மீது வழக்கு பதிவு

அப்போது ஆசாத் நகர் பகுதியில் சையது என்பவரின் வீட்டின் அருகே கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த காரை ஊர்வலத்தில் சென்றவர்கள் பார்த்து, கையில் இருந்த உருட்டு கட்டையை கொண்டு அடித்து நொறுக்கினர். இதில் காரின் கண்ணாடி மற்றும் பிற பாகங்கள் சேதமடைந்தது. இதுகுறித்து சையது தரப்பில் தொட்டபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது இந்த தாக்குதலில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினி உள்பட 15 பேர் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அஸ்வினி உள்பட 15 பேர் மீது தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை விசாரணைக்காக போலீசார் தேடி வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஸ்வினியின் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வீட்டின் அருகேயுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்களை இந்து பிரமுகர் ஒருவர் தடுக்க வந்தபோது, அந்த கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த அவர் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அஸ்வினி குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அஸ்வினியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.


Next Story