டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தகவல்


டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தகவல்
x

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி துைண முதல்-மந்திரி வீடு, அதிகாரி வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

31 இடங்களில் சோதனை

இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்தநிலையில், இவ்வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

டெல்லி மற்றும் குருகிராம் (அரியானா), சண்டிகார் (பஞ்சாப்), மும்பை (மராட்டியம்), பெங்களூரு (கர்நாடகா), ஐதராபாத் (தெலுங்கானா), லக்னோ (உத்தரபிரதேசம்) என 7 மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள், மின்னணு பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ரூ.1 கோடி பெற்றார்

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கை விவரங்கள் நேற்று வெளியாகின. மணீஷ் சிசோடியா, அரவா கோபிகிருஷ்ணா, ஆயத்தீர்வை முன்னாள் துணை ஆணையர் ஆனந்த்குமார் திவாரி, ஆயத்தீர்வை முன்னாள் உதவி ஆணையர் பங்கஜ் பட்நாகர், 9 தொழிலதிபர்கள் மற்றும் 2 கம்பெனிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுபான உரிமம் பெறுபவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கத்திலேயே உரிய ஒப்புதல் இல்லாமல், மணீஷ் சிசோடியாவும், இதர அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்தனர். மணீஷ் சிசோடியாவின் கூட்டாளியான தினேஷ் அரோரா உள்ளிட்டோர் மதுபான உரிமம் பெற்றவர்களிடம் லஞ்சம் வசூலிக்கும் பணியை கவனித்தனர்.

மதுபான உரிமம் பெற்ற சமீர் மகேந்துரு என்ற தொழிலதிபரிடம் இருந்து தினேஷ் அரோரா ரூ.1 கோடி லஞ்சம் பெற்றார்.

மதுவிலக்கு விதிகளில் திருத்தம் செய்தல், உரிம கட்டணத்தை குறைத்தல் போன்றவை மூலம் முறைகேடு நடந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இச்சோதனை குறித்து மணீஷ் சிசோடியா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ.யை வரவேற்கிறோம். சி.பி.ஐ.க்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதன்மூலம் உண்மை விரைவில் வெளிவரும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் டெல்லி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால், மத்திய ஆட்சியாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

அதனால், கல்வி துறையை கவனிக்கும் என்னையும், சுகாதாரத்துறையை கவனிக்கும் சத்யேந்தர் ஜெயினையும் குறிவைத்து முடக்கப் பார்க்கிறார்கள். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய். கோர்ட்டில் உண்மை வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் ேபட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

உலகின் மிக வலிமையான நாடான அமெரிக்காவில், மிகப்பெரிய பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' தனது முதல் பக்கத்தில் இன்று மணீஷ் சிசோடியா புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவரை 'உலகின் சிறந்த கல்வி மந்திரி' என்று புகழாரம் சூட்டி உள்ளது. அதே நாளை தேர்ந்தெடுத்து, சி.பி.ஐ. சோதனை நடத்துகிறது.

இந்த சோதனை குறித்து நாங்கள் பயப்படவில்லை. இதற்கு முன்பும், மணீஷ் சிசோடியா மற்றும் இதர மந்திரிகள் வீடுகளில் சோதனை நடந்தது. எதுவும் வெளிவரவில்லை. இதிலும் எதுவும் வெளிவராது என்று அவர் கூறினார்.

1 More update

Next Story