வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை


வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை
x

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் 3 குழுவினர் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வர உள்ளனர். அவர்கள் வருகிற 9-ந் தேதி வரை வறட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் 3 குழுவினர் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வர உள்ளனர். அவர்கள் வருகிற 9-ந் தேதி வரை வறட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

195 தாலுகாக்களில் வறட்சி

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடகத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் கர்நாடக அரசு, அந்த 195 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து உள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து வறட்சி பாதித்த தாலுகாக்களின் பட்டியலுடன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, வறட்சி பாதித்த தாலுகாக்களில் மத்திய குழு ஆய்வு நடத்தும்படி கர்நாடக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

மத்திய குழுவினர் இன்று வருகை

அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய அரசின் 3 குழுக்கள் அக்டோபர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5 நாட்கள் கர்நாடகம் வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி மத்திய குழுவினர் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகத்திற்கு வருகை தர உள்ளனர். அந்த குழுவினர் வருகிற 9-ந் தேதி வரை கர்நாடகத்தில் முகாமிட்டு வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

சித்தராமையாவுடன் ஆலோசனை

பெங்களூருவுக்கு இன்று வருகை தரும் மத்திய குழுவினர், ஆய்வுக்கு முன்பாக முதலில் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது வறட்சியால் மாநிலத்தில் ரூ.39 ஆயிரத்து 39 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பது குறித்தும், அணைகளில் உள்ள நீர் இருப்பு, வறட்சி பாதித்த தாலுகாக்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் மத்திய குழுவினரிடம், முதல்-மந்திரி சித்தராமையா பேச உள்ளார்.

நேரில் பார்வையிடுகிறார்கள்

முதல்-மந்திரியுடனான சந்திப்புக்கு பின்பு பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, விஜயநகர், ஹாவேரி, கதக், கொப்பல், சிக்பள்ளாப்பூர், துமகூரு, தாவணகெரே, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்திய குழுவினர் பிரிந்து சென்று வறட்சி பாதித்த தாலுகாக்களில் உள்ள விளை நிலங்கள், ஏரிகள், குளங்களை பார்வையிடுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மத்திய குழுவினர் சந்தித்து பேச இருப்பதாகவும், பயிர் சேதம் குறித்து அறிந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story