கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது


கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது
x
தினத்தந்தி 24 Jun 2023 2:29 AM IST (Updated: 24 Jun 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் அரிசி வழங்க கோரி மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன், மந்திரி கே.எச்.முனியப்பா நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனால் 10 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்ய திட்டத்தை தொடங்குவதில் தாமதமாகும் என தெரிகிறது.

பெங்களூரு:

கூடுதல் அரிசி வழங்க கோரி மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன், மந்திரி கே.எச்.முனியப்பா நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனால் 10 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்ய திட்டத்தை தொடங்குவதில் தாமதமாகும் என தெரிகிறது.

10 கிலோ அரிசி வழங்கும் திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூலை 1-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார்.

ஆனால் கர்நாடகத்திற்கு கூடுதலாக 5 கிலோ வீதம் மொத்தம் 2 லட்சம் டன் அரிசி வழங்க முதலில் இந்திய உணவு கழகம் சம்மதம் தெரிவித்து விட்டு, பின்னர் அரிசி வழங்க மறுத்து விட்டது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளுடனும், பஞ்சாப், சத்தீஸ்கார், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அரிசி வாங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதில், சத்தீஸ்கார் மாநிலம் மட்டும் அரிசி வழங்க சம்மதித்தாலும், விலை அதிகமாக இருந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்தே அரிசி வாங்குவதற்காக டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அதே நேரத்தில் மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து கர்நாடக உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பேச்சு வார்த்தை நடத்தி, கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, டெல்லியில் நேற்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை, கே.எச். முனியப்பா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதுடன், கர்நாடகத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க சாத்தியமில்லை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய மந்திரி நிராகரிப்பு

மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று (அதாவது நேற்று) காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசுவதற்கு அவகாசம் அளித்திருந்தார். அதன்படி, அவரை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது கர்நாடகத்தில் அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசிடம் இருப்பில் இருக்கும் அரிசியை வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய மந்திரி பியூஸ் கோயல் நிராகரித்து விட்டார்.

இந்திய உணவு கழகத்திடம் 300 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கான நாடு முழுவதும் 135 லட்சம் டன் அரிசியை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. இதன்மூலம் மத்திய அரசின் தேவைக்கு போக மீதி ஒரு மடங்கு அரிசி கூடுதலாகவே இருக்கிறது. மத்திய அரசிடம் கூடுதலாக இருக்கும் அரிசியை கர்நாடகத்திற்கு வழங்கும்படி மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் கேட்டுக் கொண்டேன்.

அரிசி வழங்க சாத்தியமில்லை

அப்படி இருந்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 300 முதல் 400 லட்சம் டன் அரிசி தேவையாக இருப்பதால், கர்நாடகத்திற்கு அரிசி வழங்க சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்து விட்டார். இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 விலை நிர்ணயித்து இருந்தது. அந்த விலைக்கே அரிசியை வாங்கி கொள்வதாக கர்நாடகம் தெரிவித்தும், அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

அதே நேரத்தில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசியை ரூ.31-க்கு 15 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு விற்பனை செய்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதை இந்திய உணவு கழகம் ரத்து செய்திருக்கிறது. இதுபற்றி கர்நாடக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

மத்திய அரசு அரசியல்

கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி கொடுக்க நிராகரித்து இருந்தாலும், அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதிலும், 10 கிலோ அரிசி வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் அரிசி இருப்பு இருந்தும் ஏழைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள அன்ன பாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்க மறுப்பதன் மூலம், இதன் உள்நோக்கம் அரசியல் காரணங்கள் ஆகும். மேலும் கர்நாடகத்திற்கு அரிசி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்வது தெளிவாகி இருக்கிறது.

இதுதவிர மற்ற உணவு கழகங்களிடம் இருந்து அரிசி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் விலை நிர்ணயம் செய்யவில்லை. மத்திய அரசு ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 ஆக விலை நிர்ணயித்துள்ளது.அதற்கு கூடுதலாக ஒரு ரூபாய், 2 ரூபாய் மேல் இருந்தால் அந்த உணவு கழகங்களிடம் இருந்து அரிசி வாங்கப்படும்.

திட்டத்தை நிறைவேற்ற தாமதம்

மற்ற மாநிலங்களிடம் இருந்தும் அரிசி வாங்க கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மத்திய அரசு அரிசி வழங்க மறுத்து விட்டதால், திட்டமிட்டபடி வருகிற ஜூலை 1-ந் தேதி அன்ன பாக்ய திட்டத்தை தொடங்குவது தாமதமாகும். என்றாலும், கூடிய விரைவில் அரிசி கொள்முதல் செய்து அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

ஏழை எளிய மக்களுக்கு அரிசி கொடுக்காமல் மத்திய அரசு தேவையில்லாத காரணங்களை சொல்லி அரசியல் செய்வது சரியானது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி கே.எச்.முனியப்பா நேற்று முன்தினம், அன்னபாக்ய திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பதால், ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் செயல்படுத்துவேம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story