கர்நாடகத்தில் வறட்சி பாதித்த 6 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு


கர்நாடகத்தில் வறட்சி பாதித்த 6 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
x

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதியை பார்வையிட வந்துள்ள மத்திய குழு நேற்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதியை பார்வையிட வந்துள்ள மத்திய குழு நேற்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய குழு வந்தது

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை பொய்த்துப்போனது.இதனால் மாநிலத்தில் பல மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. அதாவது மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 195 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய அதிகாரி அஜீத்குமார் சாகு தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு கடந்த 4-ந் தேதி கர்நாடகம் வந்தது.

நேற்று முன்தினம் முதல்-மந்திரி சித்தராமையாவை அந்த குழுவினர் பெங்களூருவில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4,860 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்படி சித்தராமையா மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

வறட்சி பகுதிகளில் நேரில் ஆய்வு

அதைத்தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த மத்திய அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து வறட்சி நிலவும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியை நேற்று தொடங்கினர்.

அதாவது அதிகாரி அஜீத்குமார் சாகு தலைமையிலான முதல் குழு நேற்று பெலகாவி, விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. அங்கு ஆய்வு பணிகளை நிறைவு செய்த அந்த குழு நேற்று இரவு விஜயாப்புராவில் தங்கியது. முன்னதாக மத்திய குழுவினர், மாவட்ட கலெக்டர் தலைமையில் வறட்சி பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர்.

கொப்பல்-கதக் மாவட்டங்கள்

அதிகாரி ராஜசேகர் தலைமையிலான 2-வது குழு கதக், கொப்பல் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது. அவர்கள் மழை தட்டுப்பாட்டால் கருகிய பயிர்களை பார்வையிட்டனர். அவர்களிடம் விவசாயிகள் கருகிய பயிர்களை காட்டி, தங்களின் கஷ்டங்களை எடுத்துக் கூறினர். நேற்று அந்த குழு தங்களின் ஆய்வு பணியை முடித்து கொப்பலில் தங்கியது. அதே போல் மத்திய நீர்மின்சார ஆணைய இயக்குனர் அசோக்குமார் தலைமையிலான 3-வது குழு சிக்பள்ளாப்பூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

2 ஏக்கரில் பயிர்கள் கருகின

இதில் சிக்பள்ளாப்பூர் சொக்கஹள்ளியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மஞ்சுநாத் என்பரில் விளை நிலத்தை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது மஞ்சுநாத், தனது 2 ஏக்கர் விளை நிலத்தில் தினை, உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிட்டு இருந்தேன். ஆனால் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகிவிட்டன. எனவே உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

மேலும் அப்பகுதியை சேர்ந்த மேலும் சில விவசாயிகள் தங்களின் பயிர்கள் கருகி இருந்ததை எடுத்து மத்திய குழுவினரிடம் காட்டினர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அந்த குழுவினர் சித்ரதுர்காவுக்கு சென்று தங்கினர். மூன்று குழுக்களும் தங்களின் முதல் நாள் ஆய்வு பணியை நிறைவு செய்தனர்.

இன்றும் ஆய்வு

நேற்று ஒரே நாளில் மத்திய குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தாலுகாக்களை பார்த்துள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) 2-வது நாள் ஆய்வு பணிகளை தொடங்குகிறார்கள். வருகிற 9-ந்தேதி வரை வறட்சி பாதித்த தாலுகாக்களில் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story