அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு


அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு
x

அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

அரசு ஊழியர்கள் மரணத்துக்கு பிறகு, அவர்களது வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாழ்க்கை துணை மறைந்த பிறகுதான், தகுதியுள்ள ஒரு பிள்ளைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமிக்கலாம். இதுகுறித்து தங்கள் துறைத்தலைவரிடம் அவர்கள் எழுத்துமூலமாக எழுதி தர வேண்டும்.

இதன்மூலம், கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு தகுதியுள்ள பிள்ளை இல்லாவிட்டால், அவருடைய கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

ஒருவேளை அவரது பிள்ளை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில், கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த பிள்ளை, 'மேஜர்' ஆன பிறகு, பிள்ளைக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். மரணம் அடைந்த பெண் ஊழியரின் பிள்ளை, தகுதிநிலையை எட்டாவிட்டாலும், பிள்ளைக்கே ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story