பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு


பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு
x

மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அது மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை மனுதாரரரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவருமான அக்பர் லோன், கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் வாழ்க என முழக்கம் எழுப்பியதாகவும், அதற்காக இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்க்கும் முதன்மை மனுதாரர் லோன், ஆனால் அவர் அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும், சட்டசபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அது மற்றவர்களை ஊக்குவிக்கும், இது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

இதையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் அக்பர் லோன் தரப்பில் ஒரு நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காஷ்மீர் பண்டிட் இளைஞர்களின் குழு என்று கூறிக்கொள்ளும் 'ரூட்ஸ் இன் காஷ்மீர்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், இந்த வழக்கு தொடர்பாக சில கூடுதல் ஆவணங்கள் மற்றும் உண்மைகளை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், அக்பர் லோன் பாகிஸ்தானை ஆதரிக்கும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவாளர் என்று அறியப்படுகிறார் என்றும் தெரிவித்தது.


Next Story