'துக்ளக் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்' - பிரியங்கா காந்தி


துக்ளக் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - பிரியங்கா காந்தி
x

ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி, டிரக் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இதையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மேலும் புதிய குற்றவியல் சட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை எனவும், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அஜய்குமார் பல்லா உறுதியளித்தார்.

இந்த நிலையில் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் 'துக்ளக் சட்டங்கள்' இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக கூறியுள்ளார்.

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் ஆக்குவதே அரசாங்கத்தின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், லட்சக்கணக்கான மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி, அவர்களை மிரட்டி, பணம் பறித்து, சிறையில் தள்ளுவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.





Next Story