சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை கூண்டில் சிக்கியது


சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

டி.நரசிப்புராவில் சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. அந்த சிறுத்தையை அதே இடத்தில் கொல்ல வேண்டும் என்று வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு:

டி.நரசிப்புராவில் சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. அந்த சிறுத்தையை அதே இடத்தில் கொல்ல வேண்டும் என்று வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்கொல்லி சிறுத்தை

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் தொடர்ந்து சிறுத்தைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் தாலுகாவில் அடுத்தடுத்து உள்ள ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 பேரை சிறுத்தை வேட்டையாடி கொன்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 பேரையும் கொன்றது ஒரே சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

இதனால் அந்த ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 120 வனத்துறையினர் கடந்த 23-ந்தேதி முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கூண்டில் சிக்கியது

மேலும் சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் பலியான ஹொரலஹள்ளி கிராமம் உள்பட 13 இடங்களில் வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்திருந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆட்கொல்லி சிறுத்தை, ஹொரலஹள்ளி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. அதாவது, கூண்டுக்குள் இருந்த இரையை சாப்பிட வந்தபோது அந்த ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் நேற்று காலை அந்தப்பகுதிக்கு சென்று பார்த்தனர். பின்னர் வனத்துறையினர் ஆட்கொல்லி சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர்.

வாக்குவாதம்

இதற்கிடையே ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது பற்றி அறிந்ததும் ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள் வனத்துறையினரை தடுத்து நிறுத்தி சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை அதேப்பகுதியில் வைத்து கொல்ல வேண்டும் என்று கூறி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறையினர், கூண்டில் சிக்கிய சிறுத்தையை கொல்லக்கூடாது என்றும், அதனை வேறுபகுதியில் கொண்டு விடுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள், அந்த சிறுத்தையை அங்கிருந்து கொண்டு செல்ல மக்கள் அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

6 வயது ஆண் சிறுத்தை

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 6 வயது நிரம்பிய ஆண் சிறுத்தையாகும். இந்த சிறுத்தையை ெபங்களூரு பன்னரகட்டா வனப்பகுதியில் கொண்டு விட முடிவு செய்துள்ளோம். பிடிபட்டது சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையாக இருக்கலாம். சிறுத்தை சிக்கினாலும் 13 இடங்களிலும் கூண்டு தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறுத்தை படை உருவாக்கப்படும்; பசவராஜ் பொம்மை தகவல்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மைசூருவில் சிறுத்தை, குடியிருப்பு பகுதிக்கு வந்து மக்களை தாக்கி காயப்படுத்தியுள்ளது. அந்த சிறுத்தை நடமாட்டத்தால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியில் இருந்தனர். மக்களை பூதியில் ஆழ்த்திய அந்த சிறுத்தையை வனத்துறை ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு சிறை பிடித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இதற்கு காரணமான வனத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க சிறுத்தை படை உருவாக்கப்படும். இதற்கு தேவையான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.


Next Story