சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினருடனான மோதலில் 13 நக்சலைட்டுகள் சுட்டு கொலை


சத்தீஷ்கார்:  பாதுகாப்பு படையினருடனான மோதலில் 13 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 3 April 2024 4:19 AM GMT (Updated: 3 April 2024 5:28 AM GMT)

சத்தீஷ்கார் வன பகுதியில் இயந்திர துப்பாக்கி ஒன்று, ரைபிள், எறிகுண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் லேந்திரா மற்றும் கொர்சோலி கிராமங்களுக்கு இடைப்பட்ட வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிஜாப்பூர் மாவட்டம், பஸ்தார் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், வன பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று காலை முதல் நடந்து வந்த இந்த மோதலில், ஒரு பெண் நக்சலைட்டு உள்பட 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தேடுதல் பணி இன்று காலை மீண்டும் தொடர்ந்தது. இதில், 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தில் இருந்து இயந்திர துப்பாக்கி ஒன்று, ரைபிள், எறிகுண்டுகள், அவற்றை வீசும் கருவிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அவர்களை அடையாளம் காணும் பணியும் மற்றொரு புறம் நடந்து வருகிறது. அவர்கள், மக்கள் விடுதலை கொரில்லா படையை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.


Next Story