சத்தீஷ்கார்; சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு


சத்தீஷ்கார்; சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy: Twitter

கார் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பலோடா கிராமத்தை சேர்ந்தவர் சுபம் சோனி. இவருக்கும், அதே மாவட்டத்தில் உள்ள ஷிவ்ரிநாராயண் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

மணமகளின் ஊரான ஷிவ்ரிநாராயண் நகரில் இந்த திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து புதுமண தம்பதி இருவரும் பலோடா கிராமத்துக்கு காரில் புறப்பட்டனர். மணமகன் சுபம் சோனியின் தந்தை ஓம்பிரகாஷ் சோனி காரை ஓட்டினார். காரில் புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள் 2 பேரும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பகாரியா ஜூலன் கிராமத்துக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனை தொடர்ந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த புதுமண தம்பதி உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story