விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை: விமானத்தில் சென்று தற்கொலை செய்த இளைஞர்...!
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது பையில் கடிதம் இருந்தது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா ரெயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பாலத்திற்கு அருகே நேற்று காலை இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த இளைஞரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் தூக்கில் தொங்கிய இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த லட்சுமி சைத்ராம் (வயது 25) என்பது தெரியவந்தது.
அவர் சத்தீஸ்கரில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்துள்ளார். மும்பை போன்ற மெட்ரோ பெருநகருக்கு சைத்ராம் வருவது இதுவே முதல்முறையாகும்.
விமானத்தில் இதுவரை பயணித்திராத சைத்ராம் தனது தற்கொலை கடிதத்தில், 'விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை... ஆகையால் தான் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்தேன்' எழுதி வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சைத்ராம் தற்கொலை செய்துகொண்டாரா?, கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.