கர்நாடகத்தில் குழந்தைகளை பராமரிக்க 'சிசு இல்ல திட்டம்'; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு


கர்நாடகத்தில் குழந்தைகளை பராமரிக்க சிசு இல்ல திட்டம்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x

கர்நாடகத்தில் குழந்தைகளை பராமரிக்க சிசு இல்ல திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெஙகளூரு:

கர்நாடகத்தில் குழந்தைகளை பராமரிக்க சிசு இல்ல திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து

நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து இருந்தாலும், ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் இருந்த பகுதிகள் நாட்டுடன் இணையவில்லை. ஓராண்டுக்கு பிறகு தாமதமாக தான் அந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. கலபுரகி, பீதர், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் அந்த நேரத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தின விழா ஆண்டுதோறும் கலபுரகியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி கல்யாண கர்நாடக தின விழா கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்கு பிறகே கலபுரகி, பீதர், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த பகுதியின் வளர்ச்சிக்காக அரசியல் சாசனத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

நிவாரண பணி

கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கப்பட்டது. கல்வி வேலை வாய்ப்பில் இந்த பகுதி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஐதராபாத்-கர்நாடக வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மதம் இல்லாத அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்வதே எங்கள் அரசின் நோக்கம் ஆகும். கல்யாண-கர்நாடகத்தில் கல்வியின் தரத்தை காப்பாற்றும் நோக்கத்தில் 'அக்ஷர அவிஸ்கார' என்ற திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த பகுதியில் புதிதாக 2 ஆயிரத்து 618 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்யாண கர்நாடக பகுதியில் 44 தாலுகாக்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசு இல்ல திட்டம்

கிராமங்களில் உள்ள நூலகங்கள் அறிவுசார் மையங்களாக தரம் உயர்த்தப்படும். மாநிலத்தில் 4 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் கிராமப்புற கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்க 'சிசு இல்லம்' திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story