பஜ்ரங்தளத்துடன் அனுமனை ஒப்பிடுவதா? பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பஜ்ரங்தளம் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது இதை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர், ''முன்பு, ராமரை பூட்டி வைத்த காங்கிரஸ் கட்சி, இப்போது, 'ஜெய் பஜ்ரங் பாலி' என்று அனுமனை வழிபடுபவர்களையும் பூட்டி வைக்க முயற்சிக்கிறது'' என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பஜ்ரங்தள் இயக்கத்துடன் அனுமனை ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியது வெட்கக்கேடானது. கோடிக்கணக்கான அனுமன் பக்தர்களை இழிவுபடுத்தும் செயல். அனுமனை வழிபடுபவர்களை இழிவுபடுத்த பிரதமருக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. அவர் அனுமன் பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார். ஆகவே, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.