ரகசிய தகவல் பரிமாற்றம்; பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜே.இ.எம். உறுப்பினர் கைது: என்.ஐ.ஏ. அதிரடி


ரகசிய தகவல் பரிமாற்றம்; பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜே.இ.எம். உறுப்பினர் கைது:  என்.ஐ.ஏ. அதிரடி
x

காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் தொடர்புடைய, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது உறுப்பினரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக இன்று கைது செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் முகமது உபைத் மாலிக் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தளபதியுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அதனுடன், படைகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் இயக்கம் பற்றிய தகவல் உள்பட ரகசிய தகவல்களை அவர் அனுப்பி வந்துள்ளார் என்ற அதிர்ச்சி விவரங்கள் விசாரணையில் தெரிய வந்து உள்ளன.

அவரிடம் இருந்து, குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்பதற்கு சான்றாக உள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதனால், அவருக்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு உள்ளது என்பது வெளிப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 21-ந்தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். அது, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் தளபதிகளுடன் இணைந்து, பல்வேறு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தரைமட்ட பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் சதி திட்ட செயல்களை பற்றிய வழக்கு ஆகும்.

சமீபத்தில், அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100 இடங்களில் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்தந்த மாநில போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது.

கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொண்டு பின்னணியாக செயல்பட்டு, நாட்டின் வடமாநிலங்களில் குறிப்பிட்ட வன்முறை தாக்குதல்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு, இந்த கும்பல் மறைமுக பாணியில் இயங்கி வந்து உள்ளது. இதுபற்றி அறிந்து, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.

பயங்கரவாதத்திற்கு தேவையான பொருட்களான ஆயுதங்கள், வெடிபொருள், வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்பட பல கடத்தல்களில் இந்த நெட்வொர்க்கில் உள்ள கும்பல் ஈடுபட்டு உள்ளது. எல்லை பகுதிகளில் தீவிரமுடன் செயல்பட்டு உள்ளது.

இதுதவிர, உள்நாட்டிலேயே சட்டவிரோத வகையில் ஆயுதங்கள், வெடிபொருள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை தயாரித்து, விநியோகித்து, கடத்தலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பிலும் இருந்து உள்ளது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை பயங்கரவாத சதி திட்ட வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காஷ்மீரில் வைத்து கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.


Next Story