இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் - பிரியங்கா காந்தி


இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் - பிரியங்கா காந்தி
x

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பா்க அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

"பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததின் மூலம், நாட்டில் உள்ள முதியவர்களின் பொருளாதார பாதுகாப்பை பாஜக பறித்துவிட்டது. வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்பவர்கள், முதுமையில் எங்கே போவார்கள்? எப்படி வாழ்வார்கள்?.

ஒருவர் அரசு வேலையில் சேரும்போது, அவர் ஓய்வு பெறும்போது, பொருளாதாரப் பாதுகாப்பின்மையை சந்திக்க வேண்டியதில்லை என்றும், ஓய்வூதியம் மூலம் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் நினைக்கிறார்.

ஆனால் பாஜகவிற்கு பறிக்க மட்டுமே தெரியும். உயிரைப் பணயம் வைத்து எல்லையில் நின்று நாட்டை காக்கும் நமது ராணுவ வீரர்களின் பொருளாதார பாதுகாப்பும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்காற்றிய ஒவ்வொரு பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும், அதனால் அவர்கள் முதுமை காலத்தில் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இது ஒவ்வொரு பணியாளரின் உரிமை ஆகும். இதை மனதில் வைத்து சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story