எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கு மோடியின் 'அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை காங்கிரஸ் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கு மோடியின் அரசியல் ஆயுதம் அமலாக்கத்துறை காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Nov 2022 9:15 PM GMT (Updated: 10 Nov 2022 9:15 PM GMT)

எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்கு மோடி, அமித்ஷாவின் ‘அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

மும்பை,

மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம்.சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.

பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story