ராஜஸ்தான்: காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் மறைவு; முதல் - மந்திரி அசோக் கெலாட் இரங்கல்


ராஜஸ்தான்: காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் மறைவு; முதல் - மந்திரி அசோக் கெலாட் இரங்கல்
x

 குர்மீத் சிங் கூனர்

தினத்தந்தி 15 Nov 2023 10:40 AM GMT (Updated: 15 Nov 2023 11:20 AM GMT)

குர்மீத் சிங் கூனர் 1998, 2008 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கரன்பூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

ஜெய்ப்பூர்,

வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) இன்று அதிகாலை உயிரிழந்தார்.

குர்மீத் சிங் கூனர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு அவரது உடலை எடுத்துச் சென்றதாக அவரது மகன் தெரிவித்தார்.

குர்மீத் சிங் கூனர் 1998, 2008 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கரன்பூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குர்மீத் சிங் கூனர் மறைவுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,

கரன்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான குர்மீத் சிங் கூனரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் கூனர், தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக எப்போதும் பாடுபட்டு வந்தார். கூனர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 25-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.


Next Story
  • chat