வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று காங்கிரஸ் புகார்


வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று காங்கிரஸ் புகார்
x

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டெல்லியில் இன்று (புதன்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கிறார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

27 லட்சம் வாக்காளர்கள்

பெங்களூருவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். நாளை (இன்று) டெல்லியில் தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் கடிதம் வழங்க உள்ளோம். இதற்கு அந்த ஆணையம் நேரம் ஒதுக்கியுள்ளது. இந்த முறைகேட்டிற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பெங்களூருவில் உரிய படிவம் இல்லாமல் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். இவற்றுக்கு கையெழுத்து போட்டவர்கள் யார்?.

நாங்கள் தனியார் நிறுவனத்திற்கு வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இந்த முறைகேட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்?. கீழ் மட்டத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் போதாது.

மூடிமறைக்கிறார்கள்

பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை போலீசார் எப்படி மூடி மறைக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு முன்பு கற்பழிப்பு, 40 சதவீத கமிஷன் புகார் குறித்த விவசாரங்களில் முன்னாள் மந்திரிகளு்கு இந்த அரசு நற்சான்றிதழை வழங்கியது.

இந்த விவகாரத்திலும் அதே நிலை ஏற்படும் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்த முற்சி செய்கிறார்கள். நாங்கள் வாக்காளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருந்தால் எங்களையும் தண்டிக்கட்டும். பா.ஜனதா அரசு வாக்காளர்களின் தகவல்களை பெற்று அதை தவறாக பயன்படுத்த முயற்சி செய்துள்ளது. இதன் மூலம் ஊழல் செய்யப்படுகிறது. காங்கிரசுக்கு வாக்காளிக்கும் சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.

அழுத்தம் கொடுத்தது யார்

இந்த வழக்கில் கைதானவர்களில் சில அதிகாரிகள், மேல் அதிகாரிகளின் அழுத்தத்தால் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது தெரிய வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படும் புகாரில் அனைத்து விவரங்களையும் குறிப்பிடுவோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்

இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க டி.கே.சிவக்குமார், நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.


Next Story