காங்கிரசில் அரை வேக்காடு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்; குமாரசாமி காட்டம்
காங்கிரஸ் கட்சியில் அரை வேக்காடு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என குமாரசாமி காட்டம் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை வீழ்த்தி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்து உள்ளது. சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்று கொண்டனர்.
இந்த தேர்தலில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி படுதோல்வியடைந்தது. இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான எச்.டி. குமாரசாமி இன்று கூறும்போது, எங்களது கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் முறையற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என சாடியுள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், சிலரின் தெளிவற்ற சிந்தனைகளை கொண்ட அறிக்கைகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. தோல்வியின் வேதனையில் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற ஆணவத்தில் உள்ளது.
ஆணவம் அழிந்து விடும் என்ற குறைந்தபட்ச விழிப்புணர்வு இல்லாதவர்கள் போன்று காணப்படுகின்றனர். இதனை உணரும் காலம் தொலைவில் இல்லை. அதற்கான காத்திருப்புக்கான பொறுமை எனக்கு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
சில அரை வேக்காடு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் முறையற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என எனது கவனத்திற்கு வந்தது. சட்டசபை தேர்தலில் தோற்று விட்டால் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை கலைத்து விடுவேன் என குமாரசாமி கூறினார் என்று அவர்கள் கூறி வருகின்றன என மற்றொரு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் முன்பு அக்கட்சி அளித்த வாக்குறுதியை சுட்டி காட்டிய அவர், ஆம். 123 தொகுதிகளில் மக்கள் வெற்றியை எனக்கு அளித்தபின்னர், கட்சியானது பஞ்சரத்னா வாக்குறுதியை அமல்படுத்தாவிட்டால், நாங்கள் கட்சியை கலைத்து விடுவோம். ஒரு போதும் வாக்கு கேட்கமாட்டோம் என கூறினோம் என்று அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.