'என்னை அவமதிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு எந்த இலக்கும் கிடையாது' - பிரதமர் மோடி


என்னை அவமதிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு எந்த இலக்கும் கிடையாது - பிரதமர் மோடி
x

Image Courtesy : @BJP4India

தன்னைப் பற்றியும், தனது சமூகத்தைப் பற்றியும் காங்கிரஸ் விமர்சித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நவ்சாரி பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-

"எனது சமூகத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் எந்த அளவுக்கு அவதூறு வருகிறதோ அந்த அளவிற்கு மக்களவை தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறும் எங்கள் தீர்மானம் வலுவடையும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விடுகிறார்கள்.

அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ, அவ்வளவு பெருமையாக 370 தாமரைகள் மலரும். என்னை அவமதிப்பதை தவிர நாட்டின் எதிர்காலத்திற்காக காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.

வாரிசு அரசியலின் பிடியில் சிக்கிய ஒரு கட்சிக்கு, தங்கள் குடும்பத்தை விட யாரும் முக்கியமில்லை. நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. பா.ஜ.க. அரசு ஏழை மக்களுக்காக சுமார் 4 கோடி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், பா.ஜ.க. குறைந்தபட்சம் 370 இடங்களை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story