'பே-சி.எம்.' போஸ்டர் விவகாரத்தில் காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு


பே-சி.எம். போஸ்டர் விவகாரத்தில் காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘பே-சி.எம்.’ போஸ்டர் விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் கட்சியினர் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சித்ரதுர்காவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல்

பா.ஜனதா அரசின் மீது ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் நேரடியாக பேச வேண்டும். ஒரு குற்றச்சாட்டு கூறும்போது, அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதன்பிறகு, விசாரணைக்கு உத்தரவிடப்படும். எந்த ஆதாரமும் இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடரிலும் வந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். இது காங்கிரசின் தகுதி. தகுதி இல்லாமல் பெயர் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

பே.சி.எம். போஸ்டர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள். மக்கள் மீது உண்மை அக்கறை இல்லாமல், கீழ்த்தரமான அரசியல் செய்வது காங்கிரஸ் கட்சியின் வழக்கமாகும். இதுபோன்று கீழ்த்தரமான அரசியல் செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட வேண்டும் என நினைக்கின்றனர். இது கர்நாடக அரசியலில் சாத்தியமில்லை.

சட்டப்படி நடவடிக்கை

பே-சி.எம். விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு 95 முதல் 100 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பது பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். ஒவ்வொரு கருத்து கணிப்பு முடிவுகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை யாரும் கணித்து விட முடியாது.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறும் போது, அதுபற்றி முடிவு செய்யப்படும். எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story