பா.ஜ.க.வை எதிர்ப்பதில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஆதார மையம், காங்கிரஸ்தான் - ஜெய்ராம் ரமேஷ்


பா.ஜ.க.வை எதிர்ப்பதில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஆதார மையம், காங்கிரஸ்தான் - ஜெய்ராம் ரமேஷ்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணியின் ஆதார மையம் காங்கிரஸ் கட்சிதான் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

'நாங்கள் மட்டுமே தேசிய கட்சி'

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காஷ்மீரில் உள்ள அவந்திபோராவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிற சூழலில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கிய ஆதார மையமாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக அதை நான் நம்புகிறேன். இன்றும் நாங்கள் மட்டுமே தேசிய கட்சியாக இருக்கிறோம். (பா.ஜ.க. தவிர்த்து).

எல்லா இடங்களிலும் காங்கிரஸ்...

நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், தாலுகாவிலும், சிறிய நகரத்திலும், நகரத்திலும் காங்கிரஸ் தொண்டர்களை நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ் குடும்பங்களைப் பார்க்க இயலும். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

நாங்கள் ஆளுகிற மாநிலங்களின் எண்ணிக்கை அல்லது நாங்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை வைத்து எங்கள் செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம் என்று சொல்வேன். காங்கிரசின் சித்தாந்தம், மையம் ஆகும். இது ஒரு மைய-இடதுசாரி கட்சி. ஒவ்வொரு கட்சியும் காங்கிரசின் கண்ணோட்டத்தை சுற்றி வருகின்றன. எனவே நாங்கள் ஆதார மையமாக இருப்போம். பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும்.

'2029-ல் தனித்து நிற்போம்'

காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புவேன். இதுவே எனது லட்சியம். ஆனால் அது 2024 தேர்தலில் அது யதார்த்தமாக இருக்காது. 2029-ம் ஆண்டு தேர்தலில், நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிட தயார் ஆவோம். சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக அதிக இடம் கொடுத்திருக்கிறது. இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பாக அமைந்து விடும்.

முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ்

ராகுல் காந்தியின் செய்தி, முதலில் கட்சியை கட்டமையுங்கள். அதிகாரம் தொடர்ந்து வரும் என்பதுதான். ராகுல் காந்தியின் பார்வை சரியானது. நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. கட்சி அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு இயக்கம். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டும் என்றால் அதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தியாக வேண்டும்.

இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிந்தைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட காங்கிரசாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story