காங்கிரசின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 150 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 150 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்கூட்டங்கள்
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.
கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
பின்னடைவு
பா.ஜனதா அரசின் குறைகள், தவறுகள், ஊழல்களை காங்கிரஸ் மக்களிடம் கொண்டு செல்வதில் சரியான முறையில் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அவற்றுக்கு ஆளும் பா.ஜனதா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஜனதாதளம் (எஸ்) கட்சியும் தனது பங்குக்கு அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. அடுக்கடுக்கான ஊழல்கள், முறைகேடு புகார்களால் களத்தில் பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை அடிக்கடி கர்நாடகத்திற்கு அழைத்து வந்து அவரது புகழை பயன்படுத்தி இந்த பின்னடைவை சரிகட்ட பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சுமார் 120 முதல் 150 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. அதில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 4 பேரை தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிட டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது, சாமனூர் சிவசங்கரப்பா (தாவணகெரே), குசுமா சிவள்ளி (குந்துகோல்), வெங்கடரமணப்பா (பாவகடா), வெங்கடரமணப்பா (தொட்ட பள்ளாப்புரா) ஆகியோருக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கிறது. இதில் அந்த குழுவின் உறுப்பினர்கள், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முதல் கட்டமாக 120 முதல் 150 தொகுதிகள் வரை வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையா கோலாரில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணாவை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்த ஒய்.எஸ்.வி.தத்தாவுக்கு கடூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. பசவனகுடியில் யு.பி.வெங்கடேசுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ள சரத் பச்சேகவுடாவை ஒசக்கோட்டை தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.