மந்திரி பதவி கேட்டு காங். எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டா போட்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை தொடர்ந்து மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மேலிடத்துடன் விவாதிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை தொடர்ந்து மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மேலிடத்துடன் விவாதிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்-மந்திரி பதவி
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்-மந்திரி தேர்வில் 4 நாட்களாக இழுபறி நீடித்தது. டி.கே.சிவக்குமார்- சித்தராமையா இடையே நீடித்த பனிப்போர் நேற்று முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் மேலிட ஆணைக்கிணங்க முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையா முதல்-மந்திரி பதவியும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.ேக.சிவக்குமார் முதல்-மந்திரி பதவியும் வகிக்க உள்ளனர்.
நிதித்துைற மற்றும் ஒதுக்கப்படாத பிற துறைகள் சித்தராமையாவுக்கும், நீர்ப்பாசனம் மற்றும் மின்சார துறை டி.கே.சிவக்குமாருக்கும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மந்திரி பதவி கேட்டு போட்டா போட்டி
முதல்-மந்திரி விவகாரத்திற்கு முடிவு வந்துவிட்டதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்து இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொடர் வெற்றியை குவித்த எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே முக்கிய இலாகாக்களை கைப்பற்ற போட்டா போட்டி போட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் மேலிடம் லிங்காயத், ஒக்கலிகர், தலித் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சாதி அடிப்படையில் மந்திரி சபையில் முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது. அதுபோல் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்கலாம் என மேலிடம் தீர்மானித்துள்ளது. ஆனால் துணை முதல்-மந்திரி பதவிக்கு 3 பேரை நியமித்தால், தனக்கு உரிய அந்தஸ்து கிடைக்காது என டி.கே.சிவக்குமார் கருதுகிறார். இதனால் தன்னை தவிர வேறு யாருக்கும் துணை முதல்-மந்திரி பதவி ெகாடுக்க கூடாது என கூறியதாக தெரிகிறது.
துணை முதல்-மந்திரி பதவிக்கு போட்டி
இதனால் துணை முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். துணை முதல்-மந்திரி போட்டியில் பரமேஸ்வர், ஜமீர்அகமதுகான், சதீஷ் ஜார்கிகோளி, எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி, ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.சி.மகாதேவப்பா, கே.எச்.முனியப்பா உள்பட மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் துணை முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற மேலிட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அதுபோல் சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு இந்தத் துறை தான் வேண்டும் என்றும் அடம் பிடிக்க தொடங்கியுள்ளனர். கே.சி.ராஜண்ணா தனக்கு கூட்டுறவுத்துறை வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வான பலரும் மந்திரி பதவி கனவுடன் உள்ளனர்.
இதனால் தற்போது மந்திரிசபையில் இடம்பிடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பலரும் பொதுப்பணித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறைகளை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
இன்று டெல்லி பயணம்
இதனால் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது பற்றி விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் பதவி ஏற்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை அழைக்க அவர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மந்திரி பதவியை எதிர்பார்த்து பல எம்.எல்.ஏ.க்களும் இருப்பதால், 2½ ஆண்டுகளுக்கு சிலருக்கும், அடுத்த 2½ ஆண்டுகளுக்கு மற்றவர்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கலாமா எனவும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.