டெல்லி அதிகாரம் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு


டெல்லி அதிகாரம் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு
x

டெல்லியில் முதல்-மந்திரிக்கான அதிகாரம் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னரின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள சூழலில், இந்தத் தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், இத்தீர்ப்பை செல்லாதது என ஆக்குகிற வகையில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டம், மோசடி என்று முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சாடி உள்ளது.

இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. இந்த சூழலில், கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேரில் நேற்று சந்தித்து பேசினார். இதில் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்றுக்கு வழங்கிய அதிகாரங்களை எப்படி எடுத்து செல்ல முடியும்? இது அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. கெஜ்ரிவாலுக்கு துணையாக நாங்கள் இருப்போம் என கூறியுள்ளார்.

நிதிஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்துவோம். நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.

இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, நிதிஷ் ஜியுடனான கூட்டத்தில், டெல்லிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுக்கிற வகையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றிய விவகாரத்தில், டெல்லியின் மக்களுக்கு துணையாக நிற்பேன் என அவர் என்னிடம் கூறினார் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நான் நேரில் சந்திப்பேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து, இந்த சட்ட மசோதாவை தோற்கடிக்க ஆதரவு கேட்பேன் என கூறினார்.

இதன்படி, உத்தவ் தாக்கரேவை வருகிற 24-ந்தேதியும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 25-ந்தேதியும் மும்பையில் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், டெல்லியில் அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அவசர சட்டத்திற்கு எதிரான ஆதரவை அவர்களிடம் கேட்க இருக்கிறார்.

இந்த நிலையில், டெல்லி மாநிலம் பற்றிய மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்போம் என காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் மற்றும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இடையே நட்பான போக்கு இல்லாத நிலையில், ஷீலா தீட்சித்தின் மாடலை கெஜ்ரிவால் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் நேற்று கூறினார். அதிகாரிகளை மதிப்புடன் நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், கட்சியின் உயர்மட்டம் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அறிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் திறனை பா.ஜ.க. அரசு குறைக்கும் செயலாக, இதனை காங்கிரஸ் பார்ப்பதுடன், ஜனநாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதற்கான முயற்சியாகவும் பார்க்கிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story