நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; மந்திரி எம்.பி.பட்டீல் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவரும், தொழில்துறை மந்திரியுமான எம்.பி.பட்டீல் நிர்வாகிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எம்.பி.பட்டீல் பேசியதாவது:-
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வரலாற்றை கொண்ட கட்சி காங்கிரஸ். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த நேரு போன்ற தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினர். இதை பா.ஜனதா தலைவர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அணைகளில் 95 சதவீதம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கட்டப்பட்டது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., எய்ம்ஸ், பசுமை புரட்சி, விவசாய புரட்சி, டிஜிட்டல் புரட்சி போன்றவற்றை ஏற்படுத்தியது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான்.
உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்றவையும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மோடி சிறப்பாக பேசுகிறார் அவ்வளவு தான். 100 நாட்களில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார். இதை அவர் மறந்திருப்பார்.
அம்பேத்கர், புத்தர், பசவண்ணர், நாராயணகுரு ஆகியோரின் கொள்கைகளை காங்கிரசின் கொள்கைகள். காங்கிரஸ் ஆட்சி கால சாதனைகள் மற்றும் மோடியின் தோல்விகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் உத்தரவாத திட்டங்களால் பயன் இருக்காது.
இவ்வாறு எம்.பி.பட்டீல் பேசினார்.