மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அமித் ஷா தாக்கு


மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அமித் ஷா தாக்கு
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 19 Sep 2023 6:08 PM GMT (Updated: 19 Sep 2023 6:14 PM GMT)

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மத்திய உள் துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைவிட வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், பெயரளவிலான செயல்களைத் தவிர, மகளிர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டுவருகிறது.

மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக்கி விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அவர்களின் நட்பு கட்சிகள் தடுத்திடலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது" என்று அதில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
Next Story