தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் - திரிணாமுல் மீண்டும் பேச்சுவார்த்தை


தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் - திரிணாமுல் மீண்டும் பேச்சுவார்த்தை
x

தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொல்கத்தா,

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 8 முதல் 14 இடங்கள் கேட்டு திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் உங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. இரண்டு எம்.பி. தொகுதிகளை தருகிறேன். அந்த இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என்று கூறினார். இறுதியாக காங்கிரஸ் 6 எம்.பி. தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் மால்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரசுக்கு நான் ஒரு இடம் கூட கொடுக்கப்போவதில்லை என்று கூறினார். மேலும், இந்தியா கூட்டணியில் தொடர்வதை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாகவும் இந்த முடிவை தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை பொறுத்து மறுபரிசீலனை செய்வதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்றும் நேர்மறையான திசையில் நகர்கிறது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் 42 இடங்களில் பெஹ்ராம்பூர், தெற்கு மால்டா, வடக்கு மால்டா, ராய்கஞ்ச், டார்ஜிலிங், புருலியா ஆகிய 6 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. இவற்றில் 5 இடங்களை காங்கிரஸ் பெறும் என நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்தது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 17 தொகுதிகளிலும், டெல்லியில் 7 தொகுதிகளில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story