17-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை


17-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை
x

ஒரு நாள் ஓய்வுக்குப்பின் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை நேற்று 16 -வது நாளாக திருச்சூரில் இருந்து தொடங்கினார்.

பாதயாத்திரை

பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கடந்த 7-ந் தேதி தனது பாரத ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம் , ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-வது நாளில் (22-ந்தேதி) திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கு ராகுல் காந்தி அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதனால் அன்றைய தினம் பாதயாத்திரைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரவோடு இரவாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா திரும்பிய ராகுல் காந்தி நேற்று 16-வது நாளாக தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். காலை 6.30 மணிக்கு திருச்சூர் பேராம்பிரா சந்திப்பில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அவருடன் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முரளீதரன் எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் பாதயாத்திரையில் அணி சேர்ந்தனர்.

உற்சாக வரவேற்பு

அங்கு தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பாதையாத்திரைக்கு வலு சேர்த்தனர். பின்னர் காலை 10 மணிக்கு ஆம்பல்லூர் சந்திப்பில் பாத யாத்திரை நிறைவு பெற்றது. மதிய இடைவேளை ஓய்வுக்கு பின் மாலை 4.30 மணிக்கு தலோர் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாத யாத்திரை திருச்சூர் சுவராஜ் ரவுண்ட் ரோடு வடக்கும்நாதன் கோவில் தெற்கு வாயிலில் நிறைவடைந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 17-வது நாள் பாதயாத்திரை திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6 30 மணிக்கு தொடங்குவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story