நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மண்டியா:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக ெபய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதாவது, இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

கே.ஆர்.எஸ்., கபினி நீர்வரத்து தொடர்ந்து

அதிகரித்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை 82.40 அடி தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் 80.40 அடி தண்ணீர் இருந்தது. அதாவது ஒரேநாளில் கே.ஆர்.எஸ். அணை 2 அடி நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 13,449 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,265.88 அடி தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் 2,260 அடி தண்ணீர் இருந்தது. இதனால் கபினி அணை ஒரே நாளில் 5.88 அடி நிரம்பி உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கபினி அணை 11 அடி நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16,580 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வேகமாக உயர்கிறது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

1 More update

Next Story