3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மனைவி, மகனை கழுத்தை நெரித்து கொன்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்


3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மனைவி, மகனை கழுத்தை நெரித்து கொன்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
x

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் மனைவி, மகனை கழுத்தை நெரித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

வீட்டில் 3 பேர் உடல்கள் மீட்பு

பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுஞ்சனகட்டே அருகே எஸ்.பி.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்தவர் மகேஷ்குமார் (வயது 44), மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவரது மனைவி ஜோதி (29). இந்த தம்பதிக்கு 9 வயதில் நந்தீஸ் கவுடா என்ற மகன் இருந்தான். இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி மகேஷ்குமார், அவரது மனைவி மற்றும் மகன் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்கள். அதாவது மகேஷ்குமார் உடல் தூக்கில் தொங்கியபடியும், ஜோதி, நந்தீஸ்கவுடாவின் உடல்கள் படுக்கை அறையிலும் கிடந்தது.

கோனனகுன்டே போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மகேஷ்குமாருக்கு புற்றுநோய் இருந்ததால், அவர் தனது மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோனனகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மனைவி, மகன் கொலை

இந்த நிலையில், 3 பேர் சாவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை கோனனகுன்டே போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், மகேஷ்குமார் மட்டும் தற்கொலை செய்திருப்பதும், ஜோதி மற்றும் நந்தீஸ் கவுடா மூச்சு திணறி உயிர் இழந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த மகேஷ்குமாருக்கு, பணப் பிரச்சினையும் இருந்துள்ளது.

இதனால் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்திருக்கிறார். தான் தற்கொலை செய்தால் மனைவி, மகனின் நிலைமை என்ன ஆகும் என்று அவர் நினைத்திருக்கிறார். இதையடுத்து, தனது மனைவி மற்றும் மகனின் கழுத்தை நெரித்து மகேஷ்குமார் கொலை செய்துவிட்டு, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதாக கோனனகுன்டே போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story