தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் ரூ.55 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் ரூ.55 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆனது.
பெங்களூரு:
பெங்களூருவில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக தீபாவளி பண்டிகையை பட்டாசுகளை வெடித்து பெங்களூரு நகரவாசிகள் கொண்டாடவில்லை. இதன் காரணமாக பட்டாசுகள் விற்பனை குறைந்த அளவே நடந்திருந்தது. இந்த ஆண்டு கொரோனா இல்லாத காரணத்தால், பெங்களூரு மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, 200 இடங்களில் 565 கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் தீபாவளிக்காக ரூ.55 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆகி இருப்பதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரூ.70 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணம் காரணமாக பட்டாசு விற்பனை மந்தமானது என்றும், அப்படி இருந்தும் ரூ.55 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்றுள்ளதால், எந்த ஒரு வியாபாரிக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் அத்துடன் கடந்த 24-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகஅளவுக்கு பட்டாசுகள் விற்பனை ஆகி இருந்ததாகவும், பெருமளவு பட்டாசுகள் தேக்கம் அடையவில்லை என்றும் பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.