பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்கள் தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
நெருக்கமாக உள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் சிக்பேட்டை, மாமுல்பேட்டை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வந்தன. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் நெருக்கமான பகுதிகளில் பட்டாசு கடைகளை நடத்தினால், தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உரிய நேரத்தில் வரமுடியாத காரணத்தால், அந்த பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியதை கடந்த 2012-ம் ஆண்டு வாபஸ் பெற்றது.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கடைகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு 8-க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள், பட்டாசு கடைகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், நெருக்கமான இடங்களில் செயல்பட்ட பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியதை போலீஸ் துறை வாபஸ் பெற்றது சரிதான் என கூறி அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.