விபத்து எதிரொலி; அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு


விபத்து எதிரொலி; அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு
x

ராஜஸ்தான் விமான விபத்து எதிரொலியாக, அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்கள் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

புதுடெல்லி,

இந்திய விமான படையில், மிக்-21 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டு 50 தசாப்தங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 1960-ம் ஆண்டு முதன்முறையாக இவ்வகை விமானங்கள் படை வரிசையில் இணைக்கப்பட்டு, தற்போது 800 வகை விமானங்கள் சேவையாற்றி வருகின்றன.

இவற்றில் படையில், போர் விமானங்களை எதிர்கொண்டு அழிக்கும் வகையை சேர்ந்த விமானங்கள் 31 உள்ளன. அவற்றில் 3 மிக்-21 பைசன் ரக விமானங்களும் அடங்கும்.

சமீபத்தில், ராஜஸ்தானில் அனுமன்கார் பகுதியில் பறந்து சென்ற மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று கடந்த 8-ந்தேதி விபத்திற்குள்ளானது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் விமானி மீட்கப்பட்டார்.

சூரத்கார் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், இதற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, விமான விபத்து பற்றி விசாரணை நடத்தி அதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக, மிக்-21 வரிசை விமானங்கள் எல்லாவற்றையும் தரை நிலைக்கு கொண்டு வந்து உள்ளனர். விசாரணை நிறைவடையும் வரை இதே நிலை தொடரும்.

தற்போது மிக்-21 பைசன் வகையை சேர்ந்த 3 விமானங்களே செயல்பட்டு வருகின்றன. அவை முழுவதும் வரும் 2025-ம் ஆண்டுக்குள் முழு அளவில் நீக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீப காலங்களில் இந்த வகை விமானங்கள் விபத்தில் சிக்கும் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், உள்நாட்டிலேயே தயாரான எல்.சி.ஏ. மார்க் 1ஏ மற்றும் எல்.சி.ஏ. மார்க் 2 உள்பட நவீன இடைநிலை திறன் பெற்ற போர் விமானங்களை இந்திய விமான படையில் சேர்ப்பது பற்றி கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.


Next Story