சைபர் குற்றங்களின் தலைநகராக மாறும் பெங்களூரு!


சைபர் குற்றங்களின் தலைநகராக மாறும் பெங்களூரு!
x

தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்று பல்வேறு புனைப்பெயர்களுடன் பெங்களூரு அழைக்கப்பட்டு வருவது பெருமையான விஷயமாகும்.

பெங்களூரு:


தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்று பல்வேறு புனைப்பெயர்களுடன் பெங்களூரு அழைக்கப்பட்டு வருவது பெருமையான விஷயமாகும்.

செல்போனுக்கு குறுந்தகவல்

பெங்களூரு நகரின் அபரி மிதமான வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குற்றங்கள் நடைபெறுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சைபர் கிரைம் எனப்படும் ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் பணம் பறிப்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அதாவது மக்களின் செல்போனுக்கு பரிசு விழுந்திருப்பதாக கூறி குறுந்தகவல் அனுப்பி வைத்துவிட்டு, அந்த பரிசுகளை பெற ஆசை வார்த்தைகளை கூறி, மக்களின் வங்கி கணக்கு தகவல்களை பெற்று, மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்து வருகிறார்கள். மக்களின் செல்போனுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு பேசியும், பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

ஓ.டி.பி. எண்ணை பெற்று...

குறிப்பாக வங்கி கணக்குகளுடன், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைக்கும்படி கூறி, வங்கி அதிகாரிகள் போல் நடித்து மக்களை தொடர்பு கொண்டு பேசி, வங்கி கணக்கு பற்றி தகவல்களை பெற்றும், மக்களின் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை பெற்றும் வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுத்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்து வருகிறார்கள். இவ்வாறு ெநாடிப்ெபாழுதில் பல லட்ச ரூபாயை சுருட்டி கொள்கிறார்கள். தற்போது செல்போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை. இதனால் செல்போனுக்கு சலுகை விலையில் பொருட்கள் கிடைப்பதாகவும் விளம்பரம் செய்தும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க முயலும் போது, சில நேரங்களில் பொருட்கள் வாங்காமல் இருந்தாலும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். அப்போது சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொள்ள முயலும் போது, சைபர் கிரைம் கும்பல்கள் உள்ளே புகுந்து பேசி, வங்கி கணக்கு விவரங்களை பெற்று பணத்தை எடுத்து மோசடி செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

தலைநகரமாக பெங்களூரு

இதுபோன்று நாம் யூகித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆன்லைன் மூலமாக மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த மோசடியில் பாமர மக்கள், பட்டதாரிகள், என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகளே கூட பணத்தை இழந்து வருகிறார்கள். பெங்களூருவில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள், தற்போது பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் அரசு அதிகாாிகளும் கூட மோசடி கும்பல்களிடம் சிக்கி பணத்தை இழந்திருப்பதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளது.

அந்த அளவுக்கு பெங்களூருவில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் நடைபெறும் நகரங்களின் தலைநகரமாக பெங்களூரு விளங்குகிறது என்பது ஆய்வின் மூலம் கூட உறுதியாகி இருக்கிறது. அதன்படி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 20 நகரங்களில் கடந்த ஆண்டு (2021) நடந்த சைபர் கிரைம் சம்பவங்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது. அதில், பெங்களூரு நகருக்கு தான் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது நாட்டிலேயே பெங்களூருவில் தான் 6,423 வழக்குகள் பதிவாகி இருந்தது.

பணத்தை திரும்ப பெற போராட்டம்

இதற்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் 3,303 வழக்குகளும், மும்பையில் 2,883 வழக்குகளும் பதிவாகி இருந்தது. பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டு 10,555 வழக்குகளும், 2020-ம் ஆண்டில் 8,892 வழக்குகளும் பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு (2022) இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருக்கிறது. பெங்களூருவில் ஒரு நாளுக்கு சராசரியாக 15 முதல் 18 நபர்களிடம் ஆன்லைன் மூலமாக மர்மநபர்கள் பணத்தை பறிக்கிறாா்கள். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பணத்தை இழக்கும் மக்கள், அதனை திரும்ப பெற கடுமையான போராட்டங்களே நடத்த வேண்டிய நிலை இருக்கிறது. பலருக்கு பணம் கிடைக்காமலேயே போய் விடுகிறது.

உதாரணமாக மக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் ஏமாற்றி பறித்து இருந்தாலும், குறிப்பிட்ட சம்பவங்களில் மட்டுமே மர்மநபர்கள் கைது செய்யப்பட்டு பணம் திரும்ப பெறப்படுகிறது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடிகளை தடுக்க போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்கள். ஆனாலும் ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு தாமதமாக வந்து மக்கள் போலீசில் புகார் அளிப்பது ஒரு காரணமாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கழித்து புகார் அளிக்கும் போது மா்மநபர்கள் செல்போன் சிம் கார்டுகள், பிற ஆதாரங்கள், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவதால், மர்மநபர்களை கைது செய்ய முடியாமல் போய் விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெறும் சைபர் கிரைம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

பிதரஹள்ளியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அரவிந்த் பானுமூர்த்தி:- சாதாரண மக்களில் இருந்து நன்கு படித்தவர்களிடமும் ஆன்லைன் மூலம் மோசடிகள் நடக்கதான் செய்கிறது. உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி விட்டது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக மக்களுக்கு புரியும் விதமாகவும், மக்களை எளிதில் சென்றடையும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் பணத்தை எந்த அளவுக்கு பாதுகாக்க முடியுமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பை அளிக்க வேண்டும், என்றார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மாரத்தஹள்ளியை சேர்ந்த சந்தோஷ்:- தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமீபமாக இந்த சைபர் மோசடிகளும் அதிகரித்து விட்டது. சைபர் கும்பலிடம் மக்கள் எளிதில் ஏமாற்றம் அடைகிறார்கள். அதில் படித்தவர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் என்ற பேதம் இல்லை. எப்போதும் செல்போனில் ஏதாவது பார்த்து கொண்டே இருக்கிறாா்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் சைபர் கும்பல் கேட்கும் தகவல்களை கொடுத்து பணத்தை இழக்கிறார்கள். எனவே மக்களாகிய நாம் தான் கவனமுடன் இருக்க வேண்டும். வங்கி கணக்கு பற்றிய தகவல்களை முன்பின் தெரியாதவா்களிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது என்றார்.

சினிமா படங்களில் கூட...

சுல்தான் பாளையாவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் இர்ஷாத் அகமது:- சைபர் குற்றங்கள் பற்றி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகிறது. சினிமா படங்களில் கூட சைபர் குற்றங்கள் பற்றி காட்டுகிறாா்கள். போலீசாரும் மக்களுக்கு சைபர் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிவித்து வருகின்றனர். இது எல்லாம் மக்களுக்கு புரிவதில்லை. சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் உழைக்காமல் மக்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து மோசடி செய்வது ஒரு மோசமான செயல் ஆகும். அந்த நபர்களுக்கு இறைவன் தான் தக்க பதில் சொல்ல வேண்டும் என்றார்.

பனசங்கரியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாள்மூர்த்தி:- ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டியது அவசியமாகும். குறிப்பாக வயதானவா்களின் வங்கி கணக்கில் பணம் இருப்பதை அறிந்தே அந்த கும்பலினர் மோசடியில் ஈடுபடுகிறாா்கள். எனவே செல்போனுக்கு தேவையில்லாமல் வரும் அழைப்புகளை எடுத்து பேசக்கூடாது. குறுந்தகவல், வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களுக்கு பதிலளிக்க கூடாது. தங்களது செல்போனில் பதிவு செய்துள்ள எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் பேசலாம். தேவையில்லாத அழைப்புகளை தவிர்த்தாலே ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.

போலீஸ் கமிஷனர் கூறுவது என்ன?

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரமன் குப்தா கூறியதாவது:-

பெங்களூருவில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க போலீஸ் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆன்லைனில் பணம் இழந்தவர்கள் உடனடியாக 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது வங்கி கணக்கு, செல்போன் எண், அதுபோல் தங்களுக்கு வந்த செல்போன் எண் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். மோசடி நடந்த 2 மணிநேரத்தில் 112 எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அந்த நபர்களின் பணத்தை பத்திரமாக மீட்டு விடலாம். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். அதே நேரத்தில் தாமதமாக சென்று புகார் அளிப்பதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராகவும், 112 என்ற எண்ணுக்கு மக்கள் தொடர்பு கொள்வது குறித்தும் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெல்லாம் புகார் அளிக்கலாம்?

வீட்டில் திருட்டு, கொள்ளை நடந்தால் அந்த பகுதியில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தால், போலீசார் வழக்குப்பதிவு செய்வாா்கள். ஆனால் ஆன்லைன் மூலமாக சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தால், அதற்காக சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் சைபர் கிரைம் அதிகரித்து வருவதால், நகரில் உள்ள 8 மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யபட்டு இருக்கிறது.

மத்திய மண்டலம் -அல்சூர்கேட்

வடக்கு மண்டலம் -மல்லேசுவரம்

மேற்கு மண்டலம் -பசவேஸ்வராநகர்

கிழக்கு மண்டலம் -சிவாஜிநகர்

தெற்கு மண்டலம் -பனசங்கரி

வடகிழக்கு மண்டலம் -எலகங்கா

தென்கிழக்கு மண்டலம்

-எச்.எஸ்.ஆர். லே-அவுட்

ஒயிட்பீல்டு மண்டலம்

- ஒயிட்பீல்டு போலீஸ் நிலையம்

வங்கி அதிகாரி

இதுபற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, பொதுமக்கள் அனைவரிடமும் தற்போது வங்கி கணக்கு உள்ளது. எந்த ஒரு வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளோ, ஊழியர்களோ வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பான் கார்டு, ஆதார் கார்டுவை இணைக்கும்படி கூறுவதில்லை. குறிப்பாக வாடிக்கையாளா்களிடம் இருந்து ஓ.டி.பி. எனப்படும் பணப்பரிமாற்றம் செய்வதற்காக செல்போனுக்கு வரும் 4 இலக்க எண்ணை கேட்பதில்லை. எனவே வங்கி அதிகாரிகள் போல் நடித்து பேசினால், அதனை மக்கள் நம்ப வேண்டாம். வங்கிகள் சார்பிலும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

பணத்தை இழந்தால் உடனே 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடி மற்றும் பணம் பறிப்பதை தடுக்க பெங்களூரு போலீசார் தகவல் தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த முன்வந்துள்ளனர். இதற்காக UFED4PC என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போனில் இருந்து தகவல்களை பெற்று விசாரணை நடத்துவதற்கும், AXIOM-D என்ற மென்பொருளை பயன்படுத்தி கம்ப்யூட்டர்களில் இருக்கும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தி மர்மநபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடம் போலீசார் தரப்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் எந்த விதமான நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் தங்களது பணத்தை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.


Next Story