தேவேகவுடா மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்; டி.கே.சிவக்குமார் ஆவேச பேச்சு
தேவேகவுடாவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
தேவேகவுடாவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி
பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேர்ந்தே களமிறங்க முடிவு செய்துள்ளது. மதசார்பற்ற கொள்கை கொண்ட ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அக்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னபட்டணாவை சோ்ந்த ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பெங்களூருவில் நேற்று காங்கிரசில் சேர்ந்தனர்.
டி.கே.சிவக்குமார் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
காந்தி ஜெயந்தி அன்று ஜனதா தளம் (எஸ்) நிர்வாகிகள் காங்கிரசில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாநிலம் முழுவதும் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்னாள் பிரதமர் தேவேகவுடா எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் பெரியவர். மிகுந்த மரியாதையுடன் அவரது விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
பயப்பட மாட்டேன்
பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தேவேகவுடா பல முறை கூறியுள்ளார். ஆனால் தற்போது அந்த கட்சியுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்துள்ளது. அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து மக்களுக்கு எந்த மாதிரியான ஒரு சமிக்ஞையை அவர் கொடுக்கிறார்?. எங்கள் கட்சியின் கொள்கையை நம்பி வருகிறவர்களை நாங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா?.
இதற்கு முன்பு தேவேகவுடா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அவர் தனது கட்சியில் சேர்த்து கொள்ளவில்லையா?. அந்த கட்சியை சேர்ந்த பலர் காங்கிரசை நோக்கி வருகிறார்கள். தேவேகவுடாவின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இது அவருக்கும் தெரியும். தேவேகவுடாவுடனும் நாங்கள் கைகோர்த்து செயல்பட்டுள்ளோம். அவர்களுக்கும் சக்தி கொடுத்துள்ளோம்.
கொள்கை பிடிப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக குமாரசாமி சொல்கிறார். எத்தனை முறை தான் இவ்வாறு அவர் சொல்வார். அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அவரை நம்பியுள்ள கட்சியினரின் நிலை என்ன ஆகும்?. கொள்கையை பேசும் குமாரசாமி அதை விட்டுவிட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளார். அந்த கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் நிலை என்ன?.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.