தினசரி கணவன் டார்ச்சர்...! ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்


தினசரி கணவன் டார்ச்சர்...! ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்
x

ரெதீஷ்குமாரின் ஷர்ட், பேண்ட், ஷூ, அணிந்து கொண்டு, அடையாளம் தெரியாதவாறு முகத்தில் முகமூடியையும் அணிந்து கொண்டு, மாமியாரான வசந்தியை மருமகள் சுகன்யா தாக்கியிருப்பது உறுதியானது.

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி.இவரது இரண்டாவது மகன் பெயர் ரெதீஷ் குமார்..திருமணமாகிவிட்டது. இவரது மனைவி பெயர் சுகன்யா.

சம்பவத்தன்று, காலை 6 மணியளவில், பால் வாங்கி வருவதற்காக, பக்கத்தில் இருக்கும் பால் பூத்துக்கு சென்று கொண்டிருந்தார் வசந்தி. அப்போது, ஒரு ஆள் திடீரென, வசந்தியை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்.

இதனால் பதறிப்போன வசந்தி ஒருகணம் திகைத்து நின்றார். ஆனால், அதற்குள் அந்த நபர் பெரிய இரும்பு கம்பியால், வசந்தியை சரமாரியாக தாக்கினார். வசந்தியின் காலிலும், தலையிலும் மிகக் கொடூரமாக தாக்கியதில், வசந்தியின் கால் அங்கேயே ஒடிந்துவிட்டது.

வலி பொறுக்க முடியாமல் வசந்தி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், வசந்தியை தாக்கிய நபர், அங்கிருந்து தப்பிவிட்டார். படுகாயமடைந்த வசந்தியை மீட்ட பொதுமக்கள், அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இப்போது வசந்திக்கு தீவிரமான சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து, திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

வசந்தியை தாக்கியது யார் என தெரியவில்லை என்பதால், அந்த பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த வீடியோவில், வசந்தியை தாக்கும் நபர் யார் என்பதை அறிய முற்பட்டனர். ஆனால், அந்த இளைஞர் யார் என தெரியவில்லை என்றாலும், அவரை பார்ப்பதற்கு ஒரு பெண் போலவே காணப்பட்டார். ஒருவேளை, ஆண் வேடமிட்டு, பெண் யாராவது இந்த காரியத்தை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

எனவே, வீடியோவில் அந்த நபர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து, அந்த பகுதி முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், அது ரெதீஷ்குமார் சட்டை என்பது தெரியவந்தது. அதாவது வசந்தியின் மகனின் சட்டையை அணிந்து, மருமகள் சுகன்யா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ரெதீஷ்குமாரின் ஷர்ட், பேண்ட், ஷூ, அணிந்து கொண்டு, அடையாளம் தெரியாதவாறு முகத்தில் முகமூடியையும் அணிந்து கொண்டு, மாமியாரான வசந்தியை மருமகள் சுகன்யா தாக்கியிருப்பது உறுதியானது.

இதற்கு பிறகு சுகன்யாவிடம் விசாரணை ஆரம்பமானது. ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவராம். எப்ப பார்த்தாலும், போதையில் வீட்டிற்கு வந்து, சுகன்யாவை அடித்து துன்புறுத்துவாராம். இந்த குடிபழக்கத்துக்கு காரணமே வசந்திதானாம்.

மகனை இப்படி குட்டிச்சுவராக வளர்த்து வைத்ததுடன், தவறுகளையும் கண்டிக்காமல் தவறியதால், மாமியார் மீது சுகன்யாவுக்கு ஆத்திரம் வந்துள்ளது. அதனால்தான், தாக்க திட்டமிட்டாராம். இப்போது சுகன்யாவை போலீசார் கைது செய்து, ஜெயிலில் வைத்துள்ளனர். ஆண் கெட்டப் அணிந்து, மாமியாரின் கால்களை அடித்து நொறுக்கிய மருமகள் பற்றிதான் கேரளா முழுக்க பேச்சாக இருக்கிறது.


Next Story