டெல்லி: குழந்தைகள் கடத்தல் கும்பலிடம் இருந்து 3 குழந்தைகள் மீட்பு; 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது


டெல்லி:  குழந்தைகள் கடத்தல் கும்பலிடம் இருந்து 3 குழந்தைகள் மீட்பு; 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

உத்தர பிரதேசத்தில் பெண் குழந்தையை விற்க முயன்று, அதனை வாங்க ஆளில்லாத நிலையில், டெல்லியில் விற்க முடிவு செய்து வந்தபோது, போலீசில் சிக்கி கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் சோனியா மருத்துவமனை அருகே குழந்தைகள் கடத்தல் கும்பல் பற்றி நங்லோய் காவல் நிலையத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பகுதியில் சுற்றி திரிந்த குழந்தைகள் கடத்தல் கும்பலை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆண் ஒருவர் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெண்களில் ஒருவர் கையில் பெண் குழந்தையை சுமந்தபடி காணப்பட்டார். அவர்கள் அந்த குழந்தையை தெரியாத இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். அந்த பெண் குழந்தை, பிறந்து 15 முதல் 20 நாட்களே இருக்கும் என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், திகாரை சேர்ந்த குர்மீத் சிங் (வயது 41) மற்றும் ஹஸ்மீத் கவுர் (வயது 37), மயூர் விகாரை சேர்ந்த மரியம் (வயது 30), நிஹல் விகாரை சேர்ந்த நைனா (வயது 24) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவர்.

பஞ்சாப்பில் உள்ள ஏழை பெற்றோரிடம் இருந்து குழந்தையை மோசடி செய்து கடத்தி சென்று, உத்தர பிரதேசத்தில் விற்க முயன்றனர். ஆனால், வாங்க ஆளில்லாத நிலையில், டெல்லியில் விற்க முடிவு செய்து வந்தபோது, போலீசில் சிக்கி கொண்ட விவரம் தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணையில், இதற்கு முன்பு சண்டிகாரில் 3 மாத பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்றது தெரிய வந்துள்ளது. ஏழை குடும்பத்தினர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story