டெல்லி: கொரிய நபரிடம் ரசீது தராமல் ரூ.5 ஆயிரம் வசூல்; போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு


டெல்லி:  கொரிய நபரிடம் ரசீது தராமல் ரூ.5 ஆயிரம் வசூல்; போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு
x

டெல்லியில் காரில் வந்த கொரிய நபரிடம் அபராதம் என கூறி, ரசீது தராமல் ரூ.5 ஆயிரம் வசூல் செய்த போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

புதுடெல்லி.

டெல்லியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்த். இந்த நிலையில், கொரிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் காரில் வந்துள்ளார்.

அவரது காரை நிறுத்திய காவலர் மகேஷ், போக்குவரத்து விதிமீறல் என கூறி அபராதம் கட்டும்படி கூறியுள்ளார். இதற்காக முதலில் ரூ.500 நோட்டு ஒன்றை எடுத்து தர அந்த நபர் முயன்றார்.

ஆனால், அபராத தொகை ரூ.5 ஆயிரம் என காவலர் கூறியுள்ளார். அதன்பின், கொரிய நபர் அபராத தொகையை எடுத்து கொடுத்து வணங்கினார். அதனை வாங்கி கொண்ட மகேஷ் சரி, நன்றி என கூறி அவருடன் கைகுலுக்கி கொண்டார். எனினும், அபராத தொகையாக வாங்கிய பணத்திற்கு ரசீது எதுவும் தரவில்லை.

ஆனால், இந்த சம்பவம் முழுவதும் காரின் முன்பகுதியில் இருந்த கேமிராவில் பதிவானது. சமூக ஊடகத்தின் தளங்களில் பல்வேறு முறை அந்த வீடியோ பகிரப்பட்டது.

இதனை கவனத்தில் கொண்டு, டெல்லி போலீசார் மகேசை சஸ்பெண்டு செய்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர். எனினும், விசாரணையின்போது, ரசீது கொடுப்பதற்குள் கார் உரிமையாளர் சென்று விட்டார் என மகேஷ் கூறியுள்ளார்.

ஊழல் போன்ற விசயத்தில் டெல்லி போலீசார் பூஜ்ய சகிப்பு கொள்கையை கொண்டுள்ளது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story