டெல்லி விவசாயிகள் போராட்டம்; பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துணை ஆய்வாளர் திடீர் மரணம்


டெல்லி விவசாயிகள் போராட்டம்; பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துணை ஆய்வாளர் திடீர் மரணம்
x

அரியானா காவல் துறையில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றிய விஜய் குமார், தோஹானா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

சண்டிகார்,

அரசுடனான 4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலியாக டெல்லி நோக்கிய விவசாயிகள் போராட்டம் இன்று தீவிரமடைந்தது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டிராக்டர்களில் குவிந்தனர். சிலர் தடுப்பான்களை உடைத்து கொண்டு முன்னேற முயன்றனர்.

இதனால், அவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதில், அரியானா காவல் துறையில் காவல் துணை ஆய்வாளராக பணியில் ஈடுபட்டு வந்த விஜய் குமார் என்பவர் தோஹானா எல்லையில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டார்.

அவருடைய உடல்நிலை இன்று மாலை திடீரென மோசமடைந்தது. பணியில் இருந்தபோதே அவர் உயிரிழந்து விட்டார். அவருடைய மரணத்திற்கு டி.ஜி.பி. இரங்கல் தெரிவித்து உள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ள அரியானா போலீசாரில் இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அரியானா போலீசார் தெரிவித்தனர்.

இதேபோன்று, இன்று போராட்டத்தின்போது, எந்தவொரு விவசாயியும் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். அது வெறும் வதந்தியே. 2 போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஒருவர் என 3 பேர், தத்தா சிங்-கானோரி எல்லை பகுதியில் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தனர்.

விவசாயி கடத்தப்பட்டார் என்ற செய்தியையும் அரியானா போலீசார் மறுத்தனர். தேவிந்தர் சிங் என்ற விவசாயியின் மகனான பிரீத் என்பவர் அரியானா போலீசால் கடத்தப்பட்டார் என வெளியான தகவல் போலியானது. அவரை போலீசார் கடத்தவில்லை.

அவர் சிகிச்சைக்காக ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தனர். அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story