டெல்லி ஜி-20 உச்சி மாநாடு; ஜி-20 இந்தியா செயலியின் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள்...


டெல்லி ஜி-20 உச்சி மாநாடு; ஜி-20 இந்தியா செயலியின் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள்...
x

டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜி-20 இந்தியா மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அனைத்து மந்திரிகளையும் பிரதமர் மோடி இன்று அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி ஜி-20 தலைமையை இந்தியா பெற்றதும், நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி-20 தொடர்புடைய 200 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. கூட்டத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சூழலில், ஜி-20 இந்தியா மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அனைத்து மந்திரிகளையும் பிரதமர் மோடி இன்று அறிவுறுத்தி உள்ளார். இதன்படி, இந்தியாவில் உள்ள மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஆனது, ஜி-20 இந்தியா என்ற தலைப்பிலான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த செயலியின் உதவியுடன், வெளிநாட்டு குழுவினருடன் எளிதில், தடையின்றி தொடர்பு கொள்ள இயலும். இந்த செயலியின் வழியே 24 மொழிகளில் தேவையான சேவையை மக்கள் பெற முடியும்.

வெளிநாட்டு குழுவினர், நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் செல்லவும், பாரத் மண்டபத்திற்கு செல்லவும் இந்த செயலி உதவும்.

இந்த செயலியானது, நிகழ்ச்சியுடன் தொடர்புடைய தகவலுக்கு ஒரு விரிவான, இருவழி தொடர்பு ஏற்படுத்த, வழிகாட்ட கூடிய வகையில் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் தளத்தில் ஜி-20 இந்தியா 2023 நிகழ்ச்சிக்கான ஒரு காலண்டர், வளங்கள், ஊடகம் மற்றும் ஜி-20 பற்றிய உள்ளார்ந்த விவரங்களும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story