டெல்லி; சிசோடியாவின் கல்வி பணியை நினைவுகூர்ந்தபோது கண் கலங்கிய கெஜ்ரிவால்


டெல்லி; சிசோடியாவின் கல்வி பணியை நினைவுகூர்ந்தபோது கண் கலங்கிய கெஜ்ரிவால்
x

டெல்லியில் கல்வி மைய திறப்பு விழாவில் சிசோடியாவை நினைவுகூர்ந்து பேசியபோது முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண் கலங்கினார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாவனா நகரில் தரியாப்பூர் கிராமத்தில் சிறப்பு திறன்களுக்கான பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், டெல்லியில் கல்வி பணியில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பங்காற்றியது பற்றி நினைவுகூர்ந்து பேசினார்.

அதில், மணீஷ்ஜிக்கு, ஒவ்வொரு குழந்தையும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது. அவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, போலியான வழக்குகளை பதிவு செய்தனர்.

ஒரு நல்ல மனிதரை பல மாதங்களாக சிறையில் அடைத்து உள்ளனர். அவர் ஏன் சிறையில் உள்ளார்? நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் பலர் சுதந்திரமுடன் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். அதுபோன்ற நபர்களை அவர்கள் கைது செய்யவில்லை.

குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை வழங்கியதற்காகவும், அவர்களுக்காக பள்ளிகளை கட்டியதற்காகவும் மணீஷ் சிசோடியாவை சிறையில் வைத்துள்ளனர் என கூறினார்.

அவரை பற்றி கெஜ்ரிவால் பேசும்போது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண் கலங்கினார். தொடர்ந்து அவர், இது அவரது கனவு. டெல்லியில் கல்வி புரட்சியை முடிவுக்கு கொண்டு வர அவர்கள் விரும்புகிறார்கள். அதனை முடிவுக்கு வர நாங்கள் விடமாட்டோம் என அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பேசினார்.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த பிப்ரவரி 26-ந்தேதி நீண்ட விசாரணைக்கு பின்னர் சிசோடியாவை கைது செய்தது. டெல்லி அரசின் 18 இலாகாக்களை கவனித்து வந்த சிசோடியாவின் கைது, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது.

டெல்லி ஆளுங்கட்சியை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் மத்திய முகமைகளை பா.ஜ.க. தவறாக பயன்படுத்தி வருகின்றது என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டாக கூறியது.

1 More update

Next Story