டெல்லி: பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்திப்பு; உயர்மட்ட குழுவுடன் நேரடி ஆலோசனை


டெல்லி: பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்திப்பு; உயர்மட்ட குழுவுடன் நேரடி ஆலோசனை
x

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை, பிரதமர் மோடி வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவுடன் அவர்கள் நேரடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



புதுடெல்லி,


ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டெல்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி வரவேற்றார்.

இந்த வருகையின்போது, டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்திற்கான வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.

இந்த பயணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கிஷிடா, சர்வதேச சமூகத்தில் ஜப்பானும், இந்தியாவும் எந்த வகையில் பங்காற்ற வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ஒரு முழுமையான அளவிலான பார்வைகளை பரிமாறி கொள்ளும் பணியில் ஈடுபட ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.

குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி-7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இருவரும், இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் நேரடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கு கொண்டு உள்ளனர்.


Next Story