டெல்லி இளம்பெண் அஞ்சலி குடித்திருந்தாரா... பிரேத பரிசோதனை அறிக்கை என்ன கூறுகிறது?


டெல்லி இளம்பெண் அஞ்சலி குடித்திருந்தாரா... பிரேத பரிசோதனை அறிக்கை என்ன கூறுகிறது?
x
தினத்தந்தி 5 Jan 2023 3:47 AM GMT (Updated: 5 Jan 2023 4:26 AM GMT)

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் இளம்பெண் அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது என அவரது தாயார் மற்றும் மாமா கூறியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.

அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு செல்ல இவ்வளவு நேரம் எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் விடை கிடைக்காமல் உள்ளது.

இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அதனால், அவர்களை ஓட்டலில் இருந்து வெளியேற்றினேன் என அதன் மேலாளர் போலீசிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அஞ்சலியின் இறுதி சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அவரது தோழி என்று கூறி கொண்டு முகமூடி அணிந்தபடி நிதி என்பவர் செய்தியாளர்களிடம் சாட்சி கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் (உயிரிழந்த அஞ்சலி) குடிபோதையில் இருந்த நிலையில், வாகனம் ஓட்ட வேண்டும் என என்னிடம் வற்புறுத்தினார்.

எங்களை கார் மோதியதும், ஒரு புறம் நான் விழுந்து கிடந்தேன். காரின் அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் பயந்துவிட்டேன். போலீசாரிடம் எதுவும் கூறாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். யாரிடமும் எதுவும் கூறவில்லை என கூறியுள்ளார்.

இந்த வழக்கில், அஞ்சலியின் தாய்வழி மாமா செய்தியாளர்களிடம் கூறும்போது, நிதி இதற்கு முன்பு மறைந்து இருந்துள்ளார். அஞ்சலி இறுதி சடங்குகள் நிறைவடைந்ததும் வெளியே வந்து விட்டார். சம்பவம் நடந்தவுடன், அதனை போலீசிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ தெரிவிக்க வேண்டும் என்ற மனித தன்மை அவருக்கு இல்லையா? அப்போது அவர் பயந்து விட்டார் என கூறுகிறார். இப்போது அவருக்கு பயமில்லையா? இது நிதியின் சதி திட்டம் என கூறியுள்ளார்.

அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. அவரது தோழி இந்த விவகாரத்தில் பொய் கூறுகிறார். நிதி கூறியது போன்று அந்த இரவில் (சம்பவம் நடந்தபோது) அஞ்சலி குடித்திருந்தால், அது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

இதில் இருந்தே நிதி பொய் கூறுகிறார் என தெரிகிறது என்று கூறியுள்ளார். அஞ்சலியை மோதி, தள்ளி, காரில் இழுத்து சென்ற குற்றவாளிகள் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

5 பேர் மீது 302-வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நிதியின் மீது 304-வது சட்ட பிரிவு பதிவு செய்யப்பட வேண்டும். அரசிடம் இதனை கோரிக்கையாக வைப்போம் என கூறினார்.

ஆனால், அஞ்சலியின் தாயார் கூறும்போது, நிதி யாரென்றே எனக்கு தெரியாது. நான் ஒருபோதும் அவரை பார்த்ததேயில்லை. அவர் அஞ்சலியின் தோழியா? உண்மையில் தோழி என்றால் அவர் எப்படி சம்பவம் நடந்தபோது, அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்க முடியும்? இது நன்றாக திட்டமிடப்பட்ட சதி.

இதில் நிதிக்கும் தொடர்பு இருக்க கூடும். அவரது வாக்குமூலம் பற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. குடிபோதையில் ஒரு நாளும் அவர் வீட்டுக்கு வந்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் மரணம் அடைந்தபோது அவரது வயிற்றில் பாதியளவு செரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இருந்தன என தெரிவிக்கின்றது.

எனினும், அவர் குடித்திருந்தாரா என்பது பற்றி அறிவதற்காக ரசாயன பகுப்பாய்வு செய்ய அவரது உள்ளுறுப்பு மாதிரிகள் எடுத்து பாதுகாக்கப்பட்டு உள்ளன.


Next Story