டி.கே.சிவக்குமார் மீதான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேகதாது யாத்திரை
கர்நாடகத்தில் ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. ஆனால் அதுதொடர்பாக கர்நாடகத்திற்கும், அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் இடையே வழக்குகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெற்றது. சுமார் 10 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரையில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த யாத்திரையின்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து கொரோனா விதிகளை மீறி, காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ராமநகர் தாசில்தார் தரப்பில், ராமநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கொரோனா விதிகளை மீறி, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பாதயாத்திரை நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், கொரோனா காலத்தில் பாதயாத்திரை நடத்தியதால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் தொற்றுநோய் பிரிவு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி வாதிட்டார்.
இதுதொடர்பாக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன் மீதுள்ள 9 வழக்குகளையும் ரத்து செய்யுமாறு டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதி விசாரித்தார். இதையடுத்து பொதுநல வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை திருத்துவதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் வழங்குவதாக நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.