அடிக்கடி கட்சி மாறினால், உங்களின் தலைமை பண்புக்கு களங்கம் ஏற்படும் - டி.கே.சிவக்குமார் பேச்சு


அடிக்கடி கட்சி மாறினால், உங்களின் தலைமை பண்புக்கு களங்கம் ஏற்படும் - டி.கே.சிவக்குமார் பேச்சு
x

அடிக்கடி கட்சி மாறினால் உங்களின் தலைமை பண்புக்கு களங்கம் ஏற்படும் என்று ஆயனூர் மஞ்சுநாத் காங்கிரசில் இணைந்த விழாவில் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

அடிக்கடி கட்சி மாறினால் உங்களின் தலைமை பண்புக்கு களங்கம் ஏற்படும் என்று ஆயனூர் மஞ்சுநாத் காங்கிரசில் இணைந்த விழாவில் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

மதிப்பை இழந்துவிடுவோம்

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி. ஆயனூர் மஞ்சுநாத், கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி டி.கே.சிவக்குமார் வரவேற்றார். அதன் பிறகு அவர் பேசியதாவது:-

கட்சியில் இருக்கும் வரை அனுபவம், மூப்பு, கவுரவம் கிடைக்கும். அடிக்கடி கட்சி மாறினால் தலைமை பண்புக்கு களங்கம் ஏற்படும். இந்த கருத்து கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். காங்கிரசில் ஒரு முறை சேர்ந்துவிட்டால் கடைசி வரை இருக்க வேண்டும். பஸ்சில் ஒரு நிலையத்தில் ஏறுவதும், மற்றொரு நிலையத்தில் இறங்குவதும் போல் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நமது மதிப்பை நாம் இழந்துவிடுவோம்.

காங்கிரசின் வரலாறு

அனைவரும் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருந்து கட்சி பணியாற்றினால் உரிய பதவி உங்களை தேடி வரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த நோக்கத்தில் நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவதே ஒரு பாக்கியம். காங்கிரஸ் பலம் நாட்டின் பலம். காங்கிரசின் வரலாறே நமது நாட்டின் வரலாறு. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் தற்போது கொடுக்கும் உத்தரவாத திட்டங்களை பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளால் வழங்க முடியுமா?.

வன உரிமை, ஆதிவாசிகள் உரிமை போன்ற பல்வேறு சட்டங்களை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. நாட்டின் அனைத்து சாதி-மத மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். கிரகலட்சுமி திட்டம் வருகிற 30-ந் தேதி மைசூருவில் தொடங்கப்படுகிறது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story