டி.கே. சிவக்குமார் முதல்-மந்திரியாக ஆதரவு தர தயார்; குமாரசாமி பேட்டி


டி.கே. சிவக்குமார் முதல்-மந்திரியாக ஆதரவு தர தயார்; குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2023 8:20 AM IST (Updated: 5 Nov 2023 8:25 AM IST)
t-max-icont-min-icon

அக்கட்சியில் எத்தனை பேர் முதல்-மந்திரியாவதற்கு விருப்பத்துடன் உள்ளனர் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. எனினும், முதல்-மந்திரியாக வருவதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே போட்டி காணப்பட்டது.

இதற்காக இரு தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டனர். கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர். இதன்பின் கட்சி மேலிட முடிவின்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், முதல்-மந்திரியாவதற்கு விரும்பினால், எங்களுடைய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் கணக்கில் எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.

எனினும் அவர், காங்கிரசில் உள்ள நிலைமையை பார்க்கும்போது, அக்கட்சியில் எத்தனை பேர் முதல்-மந்திரியாவதற்கு விருப்பத்துடன் உள்ளனர் என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும் கூறினார்.

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பலர் காங்கிரசில் இணைவதற்கு தயாராக உள்ளனர் என பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்த நிலையில் குமாரசாமி இதனை கூறியுள்ளார்.


Next Story