மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்


மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்
x

மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை,

பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் விஷயத்தில் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா, பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. என்று தெரிவித்திருந்தார். அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அவரது இந்த கருத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.


Next Story